கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தைப்புலியின் காயங்களுக்கு சிகிச்சை


கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தைப்புலியின் காயங்களுக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 7 Feb 2019 4:15 AM IST (Updated: 6 Feb 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

பாட்டவயல் அருகே கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட சிறுத்தைப்புலியின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே வீட்டிபாடி பகுதியை சேர்ந்தவர் ராயன்(வயது 70), விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவை திறந்தபோது, சிறுத்தைப்புலி ஒன்று வீட்டுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிதிர்காடு வனத்துறையினர் மற்றும் அம்பலமூலா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல் ராஜன், சலீம் உள்பட போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பூட்டிய வீட்டுக்குள் சிறுத்தைப்புலி எவ்வாறு நுழைந்தது என ஆய்வு நடத்தினர். அப்போது வீட்டின் பின்பக்க சுவரில் உள்ள துளை வழியாக உள்ளே நுழைந்தது தெரியவந்தது.

பின்னர் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடித்தனர். இதனிடையே சிறுத்தைப்புலி பிடிபட்ட சம்பவம் அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். மேலும் விவசாயி ராயன் வீடு பள்ளத்தாக்கான இடத்தில் இருந்ததால் வனத்துறை வாகனங்கள் அப்பகுதிக்கு செல்ல முடியவில்லை. இதனால் சிறுத்தைப்புலியை கூண்டோடு வனத்துறையினர் தூக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இன்மை, மக்கள் கூட்ட நெருக்கடி உள்பட பல்வேறு காரணங்களால் சிறுத்தைப்புலி இருந்த கூண்டை வனத்துறையினர் தூக்கி செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களை போலீசார் கலைத்தனர். அதன்பின்னர் நள்ளிரவு சிறுத்தைப்புலி இருந்த கூண்டை வனத்துறையினர் கடும் சிரமத்துக்கு இடையே மேடான இடத்துக்கு தூக்கி வந்தனர்.

பின்னர் வனத்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டு பிதிர்காடு வனச்சரக அலுவலகத்துக்கு சிறுத்தைப்புலி கொண்டு வரப்பட்டது. இதையொட்டி கூடலூர் வன அலுவலர் ராகுல், உதவி வன பாதுகாவலர் விஜயன், வனச்சரகர் மனோகரன் நேரில் வந்து சிறுத்தைப்புலியை பார்வையிட்டனர். அப்போது சிறுத்தைப்புலியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கோவை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் தலைமையில் டாக்டர்கள் சுகுமாறன், நந்தினி, பரத்ஜோதி, டேவிட்மோகன் கொண்ட மருத்துவ குழுவினர் நேற்று வந்தனர். பின்னர் உடலில் காயங்களுடன் இருந்த சிறுத்தைப்புலிக்கு ஊசி போடப்பட்டது. மேலும் உணவு பொருட்களுடன் மருந்துகள் கலந்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் சிறுத்தைப்புலிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கோவை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குநர் டாக்டர் மனோகரன் கூறியதாவது:-

வீட்டுக்குள் புகுந்தது 1 வயதான பெண் சிறுத்தைப்புலி. அதன் இடுப்பு, முகம் பகுதியில் பல காயங்கள் உள்ளன. இதனால் சோர்வாக காணப்படுகிறது. பிற வனவிலங்குடன், இந்த சிறுத்தைப்புலி மோதியதில் காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். எனவே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயங்கள் குணம் அடைந்த உடன் அதிகாரிகள் ஒப்புதல் பெறப்பட்டு சிறுத்தைப்புலி வனப்பகுதிக்குள் விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story