வறட்சியின் தாக்கம் எதிரொலி, ஊருக்குள் வர தொடங்கிய காட்டுயானைகள்
வறட்சியின் தாக்கம் எதிரொலியாக காட்டுயானைகள் ஊருக்குள் வர தொடங்கி விட்டன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
மலை மாவட்டமான நீலகிரியில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் ஜனவரி மாதம் உறைபனி பொழிவு அதிகமாக இருந்தது. உறைபனி பொழிவு காரணமாக வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள், அதன் பசுமையை இழந்து காய்ந்து விட்டன. மேலும் மரத்தில் இருந்து கீழே விழுந்த இலைகள் கருகி உள்ளன. வனப்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் புற்கள் கருகிய நிலையில் காட்சி அளிக்கிறது.
இதனால் வனப்பகுதியில் பசுமையான புற்கள் இல்லாமல் வறட்சி ஏற்பட்டு உள்ளது. காட்டுயானை, புள்ளி மான், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர தொடங்கி விட்டன. ஊட்டி அருகே சீகூர் காப்புக்காட்டு பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு வனவிலங்குகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததாலும், உணவு இல்லாததாலும் அருகே உள்ள தோட்டங்கள் மற்றும் கிராம பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சீகூர் வனப்பகுதியில் இருந்து 2 காட்டுயானைகள் ஊட்டி அருகே உள்ள தூனேரி கிராம பகுதியில் புகுந்தன.
அந்த யானைகள் தோட்டங்கள் சாலை வழியாக உலா வந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவை தூனேரி அருகே பல இடங்களில் சுற்றித்திரிந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் விரட்டும் பணி கைவிடப்பட்டது.
இதையடுத்து நேற்று காட்டுயானைகள் எப்பநாடு அருகே உள்ள தேயிலை தோட்டம், கெதரை ஆறு வழியாக நடமாடின. மேலும் அங்கு பயிரிடப்பட்டு இருந்த கேரட் மற்றும் பீட்ரூட் பயிர்களை நாசம் செய்தன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பீட்ரூட் அறுவடை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
பின்னர் வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நேற்று மாலை எப்பநாடு அருகே உள்ள சீகூர் வனப்பகுதிக்குள் காட்டுயானைகள் விரட்டப்பட்டன.
பந்தலூர் தாலுகா சேரங்கோடு, சிங்கோனா அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-2 பகுதியில் 10 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றன. மேலும் விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சின்னதம்பி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் அத்திக்குன் னாவில் இருந்து தேவாலா செல்லும் சாலையில் உள்ள அத்திமாநகர் பகுதியில் காட்டுயானை ஒன்று முகாமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேவாலா வன காப்பாளர் லூயீஸ் உள்ளிட்ட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வறட்சியின் தாக்கம் எதிரொலியாக வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் ஊருக்குள் வர தொடங்கி விட்டதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story