நாமக்கல்லில் 1,956 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்


நாமக்கல்லில் 1,956 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்
x
தினத்தந்தி 6 Feb 2019 10:00 PM GMT (Updated: 6 Feb 2019 7:04 PM GMT)

நாமக்கல்லில் நேற்று 1,956 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவியை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 1,956 ஏழை பெண்களுக்கு ரூ.8 கோடியே 81 லட்சம் மதிப்பிலான திருமண நிதிஉதவி மற்றும் தாலிக்கு 15 கிலோ 648 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 24,357 பயனாளிகளுக்கு தாலிக்கு 125 கிலோ தங்கமும், ரூ.90 கோடி திருமண நிதிஉதவியும் வழங்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் பட்டதாரிகளை உருவாக்கிட சேந்தமங்கலத்தி்ல் ஒரு புதிய கல்லூரியும், குமாரபாளையத்தில் ஒரு புதிய கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதேபோல் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சமூக நலத்துறையின் கூட்டுறவு தையல் சங்கத்தினர் தயாரித்த துணிப்பைகளையும் அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு, அரசு வக்கீல் தனசேகர், மாவட்ட சமூகநல அலுவலக கண்காணிப்பாளர் மோகனசுந்தரம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story