போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடக்கம் - முன்னெச்சரிக்கையாக 21 பேர் கைது
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தேனி,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரடி மேற்பார்வையில் இப்பிரிவு செயல்படும். இதில் மாவட்ட குற்றப்பதிவேட்டு பிரிவு துணை சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் பிரிவு போலீசார், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்கி உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி அமைந்துள்ள இடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் தேர்தல் கால கட்டத்தில் குற்ற சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையம் வாரியாகவும் பெறப்பட்டு வருகிறது. மேலும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளின் வரைபடம் தயார் செய்தல், அங்கு தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன்படி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள் என கருதப்படும் நபர்கள், கடந்த காலங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையிலும் செயல்பட்டவர்கள், ரவுடி பட்டியலில் உள்ளவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தி, அடுத்த 6 மாத காலங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபட மாட்டோம் என்று சுயஉறுதிமொழி ஆவணம் எழுதி வாங்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பலரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story