தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணம் தயாரித்து ரூ.23¾ லட்சம் மோசடி முன்னாள் செயலாளர்கள் உள்பட 4 பேர் கைது
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி ஆவணம் தயாரித்து ரூ.23 லட்சத்து 92 ஆயிரத்து 820 மோசடி செய்த முன்னாள் செயலாளர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கடந்த 2015-17-ம் ஆண்டு வரை பயிர்க்கடன் மற்றும் மானியம் வழங்கியதிலும், சேமிப்பு கணக்கிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் அந்த வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது இறந்தவர்களை உயிருடன் இருப்பதாக கூறி பயிர்க்கடன் வழங்கியதும், போலி ஆவணம் தயாரித்தும் சங்கத்தில் ரூ.63 லட்சத்து 92 ஆயிரத்து 820 மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக வருவாய் பதிவேட்டில் இல்லாத ஊர்களின் பெயர்களை குறிப்பிட்டு இந்த மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஓய்வு பெற்ற செயலாளர் சித்தேஸ்வரன் மற்றும் செயலாளர் ராஜேந்திரன், காசாளர் ரவி, உதவியாளர் மாதையன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ராஜேந்திரன், ரவி, மாதையன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையில் அவர்கள் ரூ.40 லட்சம் வரை சங்கத்துக்கு திரும்ப செலுத்தி விட்டனர். மீதமுள்ள தொகையை அவர்கள் செலுத்தவில்லை.
இதுகுறித்து சேலம் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலி ஆவணம் தயாரித்து ரூ.23 லட்சத்து 92 ஆயிரத்து 810 மோசடி செய்த சித்தேஸ்வரன்(வயது 61), ராஜேந்திரன்(51), ரவி(55), மாதையன்(48) ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story