உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் திடீர் சாலை மறியல்


உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Feb 2019 4:15 AM IST (Updated: 7 Feb 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

திருநாவலூர், கள்ளக்குறிச்சியில் உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனைக்கூடத்துக்கு உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் அறுவடை செய்த தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வது வழக்கம்.

அவ்வாறு கொண்டு வரப்படும் தானியங்களுக்கு விற்பனைக்கூட அதிகாரிகள் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்படும்.

அந்த வகையில் நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட உளுந்து மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அப்போது அதிகாரிகள் உளுந்து ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.5,200 என விலை நிர்ணயம் செய்தனர். இதனால் விவசாயிகள் உளுந்துக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் உளுந்துக்கான விலையை உயர்த்தி வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் கெடிலம்-கடலூர் சாலைக்கு திரண்டு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், உளுந்துக்கு நேற்று முன்தினம் கொள்முதல் செய்யப்பட்ட தொகையான ரூ.5,600-ஐ நிர்ணயிக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு போலீசார், உளுந்துக்கு விலை உயர்த்தி வழங்குவது குறித்து மாவட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற விவசாயிகள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கெடிலம்-கடலூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நேற்று 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆயிரத்துக்கும் அதிகமான உளுந்து மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அப்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உளுந்து அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 219-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகள் நேற்று முன்தினம் ஒரு மூட்டை உளுந்து அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 550-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனால் இன்றும் அதே விலையை உளுந்துக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடமும், ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கலைச்செல்வியிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கலைச்செல்வி, விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்துள்ள உளுந்து மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைத்து நாளை (அதாவது இன்று) விற்பனை செய்யலாம் என்று கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தியாகதுருகத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு நேற்று ஏராளமான விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட உளுந்து மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் உளுந்து மூட்டைகளை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு தியாகதுருகம்-திருக்கோவிலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானப்படுத்தினர். இதையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story