பிரான்ஸ் நாட்டுக்காரருடன் சென்னையை சேர்ந்தவர் ஓரின சேர்க்கை திருமணம்


பிரான்ஸ் நாட்டுக்காரருடன் சென்னையை சேர்ந்தவர் ஓரின சேர்க்கை திருமணம்
x
தினத்தந்தி 7 Feb 2019 4:45 AM IST (Updated: 7 Feb 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

பிரான்ஸ் நாட்டுக்காரரும், சென்னையை சேர்ந்தவரும் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடந்தது.

மும்பை, 

ஓரின சேர்க்கை குற்றமல்ல என்றும், அதற்கு எதிரான சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்தும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை வரவேற்றும், எதிர்த்தும் கருத்து வெளியானது.

இந்த நிலையில் தீர்ப்பு வெளியாகி சுமார் 5 மாதங்கள் ஆகி உள்ள நிலையில், ஓரின சேர்க்கையாளர் இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் நடந்தது.

இதுபற்றிய விவரம் வருமாறு-

சென்னையை சேர்ந்தவர் வினோத் பிலிப் (வயது43). ஓரின சேர்க்கையில் ஆர்வமுடையவர். மும்பையில் பணியாற்றிக் கொண்டிருந்த வினோத் பிலிப்புக்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற அவருக்கு, டேட்டிங் ஆப் மூலம் அந்த நாட்டை சேர்ந்த வின்சென்ட் இலாரி (47) என்பவருடன் அறிமுகம் கிடைத்தது.

ஆண்களான இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு உண்டானது. அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

கடந்த டிசம்பர் மாதம் இருவரும் பிரான்சில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்தியாவிலும் ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு வந்த நிலையில் இவர்கள் மும்பையில் தங்களின் திருமண வரவேற்பை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி இவர்களது திருமண வரவேற்பு மும்பை காஞ்சூர்மார்க்கில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து கோலாகலமாக நடந்தது. அப்போது இருவரும் உற்சாகமாக மாலை மாற்றிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விருந்து நிகழ்ச்சிகளும் களை கட்டின.

இந்தியாவில் ஓரின சேர்க்கை திருமணம் அவ்வளவு எளிதாக நடந்து விடாத நிலையில், ஓரின சேர்க்கையாளர் திருமண வரவேற்பு மும்பையில் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story