நீங்கள் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டலாமா? போலீஸ்காரரிடம் தகராறு செய்த 3 பேர் கைது


நீங்கள் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டலாமா? போலீஸ்காரரிடம் தகராறு செய்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2019 5:00 AM IST (Updated: 7 Feb 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

எங்களுக்கு அபராதம் விதிக்கும் நீங்கள் மட்டும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணியாமல் செல்லலாமா? என போலீஸ்காரரிடம் தகராறு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை பாந்திரா கிழக்கு பகுதியில் கேர்வாடியில் உள்ள சாலையில் சம்பவத்தன்று மதியம் பண்டாரி நாத் ராமு என்ற போலீஸ்காரர் ஹெல்மட் அணியாமல் மோட்டாா் சைக்கிளில் சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்து கொண்டு போலீஸ்காரரிடம் ஹெல்மட் அணியாமல் வந்ததற்காக வாக்குவாதம் செய்தார்.

வாலிபருக்கு ஆதரவாக மேலும் 2 பேர் அங்கு வந்தனர். அந்த வாலிபர் நான் ஹெல்மட் அணியாமல் சென்றதற்காக ரூ.1,000 அபராதம் கொடுத்தேன். இப்போது நீங்கள் மட்டும் ஏன் ஹெல்மட் அணியவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர் போலீஸ்காரரின் நண்பர் ஒருவர் ஹெல்மட்டை கொண்டு வந்து கொடுத்தார். அதை போலீஸ்காரர் அணிந்தார். அதன்பிறகு அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளின் சாவியை போலீஸ்காரரிடம் கொடுத்தார்.

இதையடுத்து அங்கிருந்து சென்ற போலீஸ்காரர் பண்டாரி நாத் ராமு, இதுகுறித்து நிர்மல் நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் உள்பட 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் பவன் சையத்னி, அசோக் கவாஸ் மற்றும் விஸ்வாஸ் சாது சிரோத்கர் என்பது தெரியவந்தது. மேலும் சம்பவம் நடந்தபோது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

Next Story