கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 6 Feb 2019 10:45 PM GMT (Updated: 6 Feb 2019 9:28 PM GMT)

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீர், மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் தண்ணீர், பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம், சிறுவானூர்கண்டிகை உள்பட 10 கிராம பகுதிகளில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் தண்ணீர் மூலம் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.

இதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும். இந்த ஏரிகளில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சில நாட்களுக்குதான் சென்னையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஜதராபாத்தில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் முரளீதரன் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டுகோள் விடுத்தனர்.

தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர். இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் பருவ மழையை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபரப்பில் நெல் பயிரிட்டனர். ஆனால் மழை பொய்த்து போனதால் தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கால்வாய் வழியாகதான் கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு பாய்ந்துவரும். ஏற்கனவே தமிழக அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கு ஏற்பவும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு நேற்று காலை கண்டலேறு அணையில் இருந்து 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 பிரதான ஏரிகளில் நேற்று காலை வெறும் 949 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இந்த தருணத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது ஆறுதலான வி‌ஷயமாகும். கண்டலேறு அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாயப்பு உள்ளது. அதன் பின்னர் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு பாய்ந்து செல்லும். பூண்டி ஏரியில் 3 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வெறும் 172 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பில் உள்ளது. கிரு‌ஷணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். அதன்படி கடந்த ஆண்டு 2 தவணைகளில் மொத்தம் 3.884 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு கிடைத்தது.


Next Story