காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை “கட்சி மாறியவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தக்க பாடம் புகட்டியுள்ளது”
கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் கட்சி மாறியவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தக்க பாடம் புகட்டியுள்ளது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
பா.ஜனதாவினர் எந்த முயற்சி மேற்கொண்டாலும், கூட்டணி அரசை கவிழ்க்க முடியாது. காங்கிரசில் மேலிடம் உள்ளது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உள்ளது. அத்துடன் கட்சி தாவல் தடை சட்டமும் உள்ளது. அந்த சட்டத்தின் கீழ், கட்சி மாறியவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தக்க பாடம் புகட்டியுள்ளது என்பது எங்கள் கண் முன் உள்ளது.
அதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பிரச்சினையை தங்களின் தோள் மீது இழுத்து போட்டுக்கொள்ள மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன். பா.ஜனதாவை சேர்ந்த சிலர் மும்பையில் அமர்ந்து கொண்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்கிறார்கள்.
பல்வேறு ஆசைகளை காட்டுகிறார்கள். ஓரிரு எம்.எல்.ஏ.க்களை தவிர மற்றவர்கள் யாரையும் பா.ஜனதா தலைவர்களால் தொடர்புகொள்ள முடியாது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் பக்கம் நின்றுள்ளனர். அதனால் யாரும் கட்சி மாற மாட்டார்கள்.
கவர்னரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்திய பா.ஜனதா உறுப்பினர்களின் செயல் மிக மோசமானது. கர்நாடக சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் பேசும் கவர்னருக்கு அவமரியாதை செய்த நிகழ்வு இதுவரை நடந்தது இல்லை. இப்போது பா.ஜனதாவினர் கவர்னருக்கு அவமரியாதை செய்துள்ளனர்.
பா.ஜனதாவினரின் ஆட்சி அதிகார மோகத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களால் பா.ஜனதாவினர் தங்களின் மரியாதையை தான் இழப்பார்கள். ஆட்சி அதிகாரத்திற்காக பா.ஜனதாவினர் எத்தகைய மட்டமான செயலையும் செய்வார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம்.
அரசியல் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சரியான நேரத்தில் உரிய முடிவு எடுப்போம். இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story