‘அரசியலில் இருந்து விலகுவேன்' மிலிந்த் தியோரா எச்சரிக்கை
மும்பை காங்கிரஸ் உள்கட்சி பூசலால் அதிருப்தி அடைந்த முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா, ‘இதே நிலை நீடித்தால் அரசியலில் இருந்து விலகுவேன்' என தெரிவித்தார்.
மும்பை,
மும்பை காங்கிரசில் உள்கட்சி பூசல் வலுத்து உள்ளது. மும்பை காங்கிரஸ் தலைவராக இருக்கும் சஞ்சய் நிருபம் கட்சியின் மூத்த தலைவர்களை அனுசரித்து செல்வதில்லை என்றும், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது மூத்த தலைவர்களை ஆலோசிப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
எனவே சஞ்சய் நிருபத்தை மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சஞ்சய் நிருபத்துடன் கருத்து மோதலில் இருப்பவர்களில் முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா முக்கியமானவர். அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில், தென்மும்பை தொகுதியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் மும்பை காங்கிரசில் ஏற்பட்டு உள்ள உள்கட்சி பூசலால் மிலிந்த் தியோரா கடும் அதிருப்தி அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் “உள்கட்சி மோதலால் காங்கிரசை கிரிக்கெட் மைதானமாக்கி விட முடியாது. உள்கட்சி விவகாரங்களை பொது இடங்களில் விவாதிக்க நான் விரும்புவதில்லை. தற்போது நடைபெறும் விஷயங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளேன்.
நான் நாடாளுமன்ற தேர்தல் குறித்து என்ன முடிவு செய்துள்ளேன் என்பது கட்சித் தலைமைக்கு தெரியும். எனினும், கட்சியின் மேலிடத் தலைமை மீதும், கொள்கைகள் மீதும் முழு நம்பிக்கை உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மிலிந்த் தியோரா கூறியதாவது:-
மும்பை காங்கிரசில் இருக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். தற்போதைய சூழல் நீடிக்குமானால், அரசியலில் இருந்து நான் விலகுவேன். அதே சமயம், என்னுடைய உணர்வுகள் குறித்த கட்சி மேலிடத்துக்கு ஏற்கனவே தெரியப்படுத்திவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மும்பை காங்கிரசுக்குள் ஏற்பட்டு உள்ள உள்கட்சி மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story