திருமணத்துக்கு முன்பு பெண்களிடம் கன்னித்தன்மையை சோதிப்பது தண்டனைக்குரிய குற்றம் - மந்திரி ரஞ்சித் பாட்டீல் அறிவிப்பு
திருமணத்துக்கு முன்பு பெண்களின் கன்னித்தன்மையை சோதிப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்று மந்திரி ரஞ்சித் பாட்டீல் கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் கஞ்சர்பாட் உள்ளிட்ட சில சமுதாயங்களில் திருமணத்துக்கு முன்பு மணப்பெண்களின் கன்னித்தன்மையை சோதிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த சோதனையின் போது, கன்னித்தன்மை நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அந்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய முன்வருகிறார்கள்.
இந்த பிரச்சினை சமீபகாலமாக பரபரப்பாக பேசப்படும் நிலையில், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கத்துக்கு எதிராக பல இளைஞர்கள் ஆன்-லைனில் பிரசாரம் செய்யவும் தொடங்கி உள்ளனர்.
இந்தநிலையில் மராட்டிய உள்துறை இணை மந்திரி ரஞ்சித் பாட்டீலை நேற்று சிவசேனா செய்தி தொடர்பாளர் நீலம் கோரே தலைமையில் சமூக ஆர்வலர்கள் குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது கன்னித்தன்மை சோதிக்கும் வழக்கத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர் மந்திரி ரஞ்சித் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னித்தன்மை சோதனை செய்வது பாலியல் குற்றமாக கருதப்படும். இது தொடர்பாக சட்டம் மற்றும் நீதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இது தண்டனைக்குரிய குற்றம் என்று சுற்றறிக்கை அனுப்பவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story