முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
சிவகங்கையில் நடைபெற்ற முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான முதல்–அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். அமைச்சர் பாஸ்கரன் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தான் விளையாட்டுத்துறைக்கு தனிக்கவனம் செலுத்தி அந்த துறையை தனிப்பெரும் துறையாக உருவாக்கி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அதன் காரணமாகத்தான் உலக அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சாதனைகள் படைத்துள்ளனர்.
விளையாட்டு என்பது ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் அவசியமான ஒன்று. ஆரம்பக்கால பருவத்தில் மாணவ–மாணவிகள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். கடந்த காலக்கட்டத்தின்போது நகர் பகுதிகளில் மட்டும் தான் விளையாடுவதற்கான வசதிகள் இருந்தது. தற்போது கிராமப்புற பகுதிகளிலும் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான உடற்பயிற்சி மைதானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன்துறை உதவி இயக்குனர் புண்ணியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு, சிவகங்கை தாசில்தார் ராஜா, கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் பாண்டி, சசிக்குமார், ஜெயப்பிரகாஷ், ராஜா, மோகன், பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.