கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 24 அடியாக குறைந்தது


கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 24 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 6 Feb 2019 9:59 PM GMT (Updated: 6 Feb 2019 9:59 PM GMT)

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 24 அடியாக குறைந்துள்ளது. தற்போது தினமும் 7½ கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

கோவை, 

கோவை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிறுவாணி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் குடிநீர் எடுக்க 4 வால்வுகள் உள்ளன. அதன் மூலம் தினமும் 11 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும். கடந்த ஆண்டில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் நவம்பர் மாதம் அணை நிரம்பியது.

இதனால் அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வடகிழக்கு பருவமழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் 8 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை என்பதால் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சிறுவாணி அணையில் தற்போது 24 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. தினமும் 7½ கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தண்ணீர் ஆவியாவதும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நீரேற்று நிலையத்தில் உள்ள 2-வது வால்வு வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

தற்போது இருக்கும் தண்ணீர் மே மாதம் வரை போதும். கேரள பகுதியில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கிவிடும் என்பதால் அணைக்கு தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. மேலும் பில்லூர் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் கோடைக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story