கோவை மாவட்டத்தில் தொழிற்பூங்கா மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
கோவை மாவட்டத்தில் அமைய உள்ள தொழிற்பூங்கா மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
கோவை,
கோவையை அடுத்த வையம்பாளையத்தில் மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு மணி மண்டபம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக நாட்டின் முதுகெலும்பாக உள்ள வேளாண் மை துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இந்த ஆட்சி 6 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்த ஆட்சியை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது. விவசாயிகள் உள்பட அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கினார்.
கோவையில் 400 ஏக்கர் பரப்பளவில் தொழிற் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சமீபத்தில் நடைபெற்ற 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. கோவை மாவட்டம் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 70 ஆண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதல்- அமைச்சர் நிறைவேற்றி உள்ளார்.
காந்திபுரம் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் 80 சதவீத விபத்து குறைந்துள்ளது. திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. அவினாசி சாலையில் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், ‘எதிர்ப்பு அலையை மீறி மக்களின் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் முதல்-அமைச்சர் நீங்கா இடம் பிடித்துள்ளார்’ என்றார்.
விழாவில் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக உக்கடத்தில் மிகப்பெரிய பாலம், பொள்ளாச்சி சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கி தற்போது டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதனால் முதல்- அமைச்சரை குடிமராமத்து நாயகன் என்று மக்கள் அழைப்பார்கள். குடிமராமத்து பணிகள் மூலம் குளம், குட்டைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெற உள்ளனர். எனவே இந்த அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story