மு.க.ஸ்டாலின் நடத்தும் ‘ஊராட்சி சபை கூட்டத்தால் எந்த பலனும் இல்லை’ அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு


மு.க.ஸ்டாலின் நடத்தும் ‘ஊராட்சி சபை கூட்டத்தால் எந்த பலனும் இல்லை’ அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
x
தினத்தந்தி 7 Feb 2019 4:30 AM IST (Updated: 7 Feb 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்.ஸ்டாலின் நடத்தும் ஊராட்சி சபை கூட்டத்தினால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

பேரையூர்,

பேரையூர், டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்.சுப்புலாபுரம், கூவலப்புரம், கீழப்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, பெரியபூலாம்பட்டி, வன்னிவேலாம்பட்டி உள்பட 24 இடங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டியும், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறும் வகையிலும் ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி நடந்தது. இந்த பேரணியில் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் கலந்து கொண்டு வழிநடத்தினார். பேரணி சென்ற இடங்களில் அ.தி.மு.க. கொடிகளை அமைச்சர் ஏற்றி வைத்தார். முன்னதாக எம்.சுப்புலாபுரத்தில் நிருபர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:–

ஸ்டாலின் தற்போது நிலை தடுமாறி பேசி வருகிறார். மாவட்ட அளவில் சென்றால் கூட்டம் சேருவதில்லை என்பதால் கிராம அளவிலாவது கூட்டம் சேர்ப்போம் என்று செல்கிறார். ஸ்டாலின் நடத்தும் ஊராட்சி சபை கூட்டத்தால் அவருக்கும், மக்களுக்கும் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் புள்ளி விவரங்களாக கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது.

பா.ஜ.க. கூட்டணிக்காக அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று டி.டி.வி.தினகரன் கூறுகிறார். அ.தி.மு.க. தலைமை அப்படி சொல்லவில்லை. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் பொதுமக்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசு கொடுத்தார். இன்றைக்கு அதேபோல மத்திய அரசு 12 கோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கையை அ.தி.மு.க. வரவேற்கிறது. இது மக்களுக்கான நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இப்படிதான் கருத்து ஒற்றுமை வருகிறது. இதுகுறித்து முதல்–அமைச்சர் தெளிவாக சொல்லி இருக்கிறார். யார் தமிழக மக்களின் நலனுக்கான திட்டங்களை தருகிறாகளோ அவர்களோடு நாங்கள் கரம் கோர்ப்போம் என்று தெளிவாக சொல்லி உள்ளார். எனவே அழுத்தம் தருகிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் சொல்வது அவர்களோடு சேர்வதற்கு ஆட்கள் இல்லை என்பதற்காகவே.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேரணியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி, முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் டாக்டர் பாவடியான், நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன், ஐ.பி.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story