நகரமைப்பு குழுமத்தின் சேவைகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடி பெற நடவடிக்கை எடுங்கள் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
புதுவை நகரமைப்பு குழுமத்தின் சேவைகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் பெற நடவடிக்கை எடுங்கள் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி தனது அரசு அலுவலக ஆய்வு பணிகளின் வரிசையில் நேற்று புதுவை நகரமைப்பு குழும அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். புதுவை நகரமைப்பு குழுமமானது வீடு கட்டுவதற்கான அங்கீகாரம், வீட்டுமனைகளுக்கான அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த ஹெல்ப் டெஸ்க் பகுதியில் யாரும் இல்லாததை கண்ட கவர்னர் கிரண்பெடி புதுவை நகரமைப்பு குழுமத்தை அணுகுபவர்கள் குறித்த விவரங்களை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தினார். குறிப்பாக வீட்டு மனைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விண்ணப்பங்களை பதிவு செய்ய கேட்டுக்கொண்டார்.
அந்த விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதில் பதிவேற்றம் செய்யவும் வலியுறுத்தினார். இது விண்ணப்பங்களை வழங்குவது, கட்டணம் வசூலிப்பது போன்ற சேவைகளை எளிதாக்கும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? எதற்காக? என்பன போன்ற விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருப்பது வெளிப்படை தன்மைக்கு உதவும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது விண்ணப்பங்கள் தகவல் பதிவு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதனை டிஜிட்டல் மயமாக்குவதால் எந்த விண்ணப்பத்தையும் உடனடியாக மீட்டெடுக்கலாம் என்றும் அறிவுறுத்தினார். கட்டிடங்களுக்கு அனுமதி தருவது தொடர்பான விண்ணப்பங்களை மென்பொருள் மூலம் வழங்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து தேசிய தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து அதனை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பொதுசேவை மையம் மூலம் ஆன்லைன் மூலம் திட்டக்குழுமத்தின் அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்தபடி பொதுமக்கள் பெற தேவையான நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தினார்.