பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5 கோடி பணிகள் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்


பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5 கோடி பணிகள் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 6 Feb 2019 11:15 PM GMT (Updated: 6 Feb 2019 11:02 PM GMT)

பொதுப்பணித்துறை சார்பில் சுமார் ரூ.5 கோடி செலவில் நடைபெற உள்ள பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி,

புதுவை ராஜீவ்காந்தி சிலை முதல் கருவடிக்குப்பம் வரை கிழக்கு கடற்கரை சாலை மழை மற்றும் கடுமையான போக்குவரத்து காரணமாக மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த சாலை ரூ.3.75 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பூமிபூஜை கொக்குபார்க் அருகில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்ட பணிகளை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் மகாலிங்கம், செயற்பொறியாளர் ஜீவதயாளன், உதவி பொறியாளர் மணவாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் புதுவை ராகவேந்திரா நகர், ஜான்சி நகர், நடேசன் நகர், மாரியம்மன் நகர் மற்றும் அதனை சார்ந்த விடுபட்ட பகுதிகளில் புதிய குடிநீர் குழாய்கள், எல்லைப்பிள்ளைசாவடி மேல் அடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து நீர் உந்து குழாய்கள் பதித்தல் மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகள் ரூ.2 கோடியே 10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணிகளையும் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ., கண்காணிப்பு பொறியாளர் லுசியன் பெட்ரோகுமார், பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் ரமணி, இளநிலை பொறியாளர் ஞானவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story