சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம் வைத்து பூஜை


சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தீர்த்த கலசம் வைத்து பூஜை
x
தினத்தந்தி 7 Feb 2019 4:37 AM IST (Updated: 7 Feb 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கதிர் அரிவாள் அகற்றப்பட்டு நேற்று முதல் தீர்த்த கலசம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

காங்கேயம், 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக, சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில், பக்தர்கள் கொண்டு வரும் ஏதாவது ஒரு பொருளை அந்த உத்தரவு பெட்டியில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம். இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

சிவன்மலை ஆண்டவன் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி தனது கனவில் உத்தரவான பொருளை கூறுவார். கோவில் நிர்வாகம் சாமி சன்னிதானத்தில் வைத்து சிவப்பு, வெள்ளை ஆகிய 2 பூக்களை வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளை பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு தினசரி பூஜைகள் செய்யப்படும்.

இப்படி, ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லை. மற்றொரு பக்தரின் கனவில் வந்து, அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்தப்பொருள் நாட்டில் ஏற்றமும் பெறலாம், இறக்கமும் பெறலாம் என்பதற்கான குறியீடாக இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருளை இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு இதற்கு முன்னர் இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஏர்கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மணல், தண்ணீர், உப்பு, பூ மாலை, துளசி, அம்பு, கணக்கு நோட்டு, செம்மண் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி முதல் நேற்று வரை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கதிர் அரிவாள் வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று முதல் அந்த கதிர் அரிவாள் அகற்றப்பட்டு தீர்த்த கலசம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இதை கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ராயனூரை சேர்ந்த பாஸ்கர்(வயது 35) என்ற பக்தர் கொண்டு வந்துள்ளார். இவருடைய கனவில் முருகன் வந்து மேற்கண்ட பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கும்படி கூறியதாகவும், இதை தொடர்ந்தே ஆண்டவன் உத்தரவு பெற்று தீர்த்த கலசம் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பக்தர்கள் கூறுகையில் “சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தீர்த்த கலசம் வைத்து பூஜை செய்வது என்பது வருங்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து போகப்போகத்தான் தெரிய வரும்” என்று கூறினார்கள்.


Next Story