மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு


மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு
x
தினத்தந்தி 6 Feb 2019 11:45 PM GMT (Updated: 6 Feb 2019 11:09 PM GMT)

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

காரைக்கால்,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணி குறித்து காங்கிரஸ் கட்சி மகளிரணி ஆலோசனை கூட்டம், காரைக்காலில் நடைபெற்றது. மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நிர்மலா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:-

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியின்போது முதல்- அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோதுதான் பொதுமக்களுக்கான இலவச அரிசி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அனைத்துதரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் இந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றி வந்தது.

தற்போதைய காங்கிரஸ் அரசும் இந்த தொடர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் கவர்னர் கிரண்பெடி, பா.ஜ.க. பிரதமர் மோடியின் பேச்சைக்கேட்டு பெரும் முட்டுக்கட்டையாக நின்று திட்டத்தையே முடக்கிவிட்டார். ஆனாலும், முதல்-அமைச்சர் நாராயணசாமி பிடிவாதமாக நின்று அரிசிக்கு பதிலாக பணமாவது போடவேண்டும் என சாதித்து வருகிறார்.

இதேபோல், முதியோர் ஓய்வூதியம் பெற புதியவர்கள் விண்ணப்பித்தால்கூட நிதி இல்லை என கோப்புகளை கவர்னர் திருப்பி அனுப்பி வருகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வரும். அப்போது இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து திட்டமும் தங்கு தடையின்றி நிறைவேறும். அதற்கு, பா.ஜனதா ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கை மகளிர் அணியினர் மக்களிடம் தெரியப்படுத்தி வரும் மக்களவை தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றிபெற பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story