திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்துக்கு 2-வது சுற்று தண்ணீர் திறப்பு
திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்துக்கு 2-வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தளி,
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தின் (பி.ஏ.பி.) கீழ் கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பி.ஏ.பி. பாசன நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அத்துடன் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற கூட்டுகுடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 3-ம் மண்டல பாசனத்திற்கு உரிய இடைவெளியில் நீர்வரத்து மற்றும் நீர்இருப்பினை பொறுத்து கடந்த மாதம் 5-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைதொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் பின்னர் 21 நாட்களுக்கு பின்பாக கடந்த மாதம் இறுதியில் முதல் சுற்று தண்ணீர் நிறைவடைந்தது. பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. ஆனால் காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து தொடர்ச்சியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு 2-வது சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. 2-வது சுற்று தண்ணீர் 21 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் நேற்றை 48.99 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து காண்டூர் கால்வாய் மற்றும் பாலாற்றின் மூலமாக 657 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 723 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story