பாளையங்கோட்டையில் தாறுமாறாக ஓடிய காரால் பரபரப்பு பெண்கள் உள்பட 3 பேர் காயம்


பாளையங்கோட்டையில் தாறுமாறாக ஓடிய காரால் பரபரப்பு பெண்கள் உள்பட 3 பேர் காயம்
x
தினத்தந்தி 8 Feb 2019 3:30 AM IST (Updated: 7 Feb 2019 6:00 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் தாறுமாறாக ஓடிய காரால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பெண்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் தாறுமாறாக ஓடிய காரால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பெண்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

தாறுமாறாக ஓடிய கார்

நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜான் (வயது 45). இவர் நாகர்கோவிலில் ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய தாயார் ஜாய் (70). இவருக்கு நெல்லையில் உள்ள ஒரு கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று காலை காரில் புறப்பட்டனர். காரில் ஜான், அவருடைய தந்தை ரவீந்திரன், தாயார் ஜாய் ஆகியோர் இருந்தனர்.

இந்த கார் நெல்லை பாளையங்கோட்டை தெற்கு புறவழிச்சாலையில் பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் நேற்று காலை வந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடையில் கார் ஏறியபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டல் நோக்கி பாய்ந்தது.

3 பேர் காயம்

இதில் ஓட்டல் முன்பு நின்று கொண்டிருந்த கோபாலசமுத்திரத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளி மாரியம்மாள் (38) என்பவர் மீது கார் மோதியது. அதன்பிறகும் கார் நிற்காமல் ஓடி அங்கு நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள், டீ டம்ளர் வைத்து குடிப்பதற்கு போடப்பட்டிருந்த மேஜை ஆகியவற்றின் மீது மோதி, இறுதியாக இரும்பு கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர் குதித்து தப்பினார்.

கார் தாறுமாறாக ஓடியதால் காருக்குள் இருந்த ரவீந்திரன், ஜாய் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. டீ டம்ளர் வைத்து குடிப்பதற்கு போடப்பட்டிருந்த இரும்பு மேஜை உடைந்து சேதம் ஆனது.

பரபரப்பு

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தாறுமாறாக கார் ஓடி விபத்து ஏற்பட்டதாலும், அதில் 3 பேர் காயம் அடைந்ததாலும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story