வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டு எந்திரங்களை கையாளுவது எப்படி நெல்லையில் அதிகாரிகளுக்கு பயிற்சி


வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச்சீட்டு எந்திரங்களை கையாளுவது எப்படி நெல்லையில் அதிகாரிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 7 Feb 2019 10:00 PM GMT (Updated: 7 Feb 2019 12:46 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனை கையாளுவது எப்படி என்பது குறித்து அதிகாரிகளுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனை கையாளுவது எப்படி என்பது குறித்து அதிகாரிகளுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒப்புகைச்சீட்டு எந்திரம்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் இப்போதே தயாராகி விட்டது. அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

இ.வி.எம். எனப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பொத்தானை அழுத்தும்போது யாருக்கு அந்த ஓட்டு பதிவாகியது என்பதை அறிய முடியாது. தற்போது வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை உறுதி செய்யும் வகையில் ‘வி.வி.பாட்’ எனப்படும் ஒப்புகைச்சீட்டு பதிவிடும் எந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின்போது ஒருசில வாக்குச்சாவடிகளில் இந்த எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

10 தொகுதிகள்

இந்த நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம், அம்பை ஆகிய சட்டசபை தொகுதிகள், தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு (தனி) உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகள் என மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் அமைந்து உள்ளன.

இந்த 10 தொகுதிகளிலும் மொத்தம் 1,389 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு பயன்படுத்துவதற்கு 5,380 ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

அதிகாரிகளுக்கு பயிற்சி

இந்த எந்திரங்களை எப்படி கையாளுவது என்பது குறித்து சமீபத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் பயிற்சி பெற்று திரும்பினர். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தேர்தல் அலுவலர்களுக்கு, ஒப்புகைச்சீட்டு எந்திரத்தை எப்படி கையாளுவது என்பது குறித்த பயிற்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்த உதவி கலெக்டர்கள் ஆகாஷ் (சேரன்மாதேவி), மணீஷ் நாரணவரே (நெல்லை), சவுந்தரராஜன் (தென்காசி) ஆகியோர் தலைமை தாங்கி பயிற்சி அளித்தனர். அப்போது மாதிரி ஓட்டுச்சாவடி அமைத்து, அதில் ஓட்டுப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு எந்திரத்தில் ஒப்புகைச்சீட்டு பதிவு செய்தல் போன்ற செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் உதவி கலெக்டர் ஆகாஷ் பேசியதாவது:–

7 நொடிகளுக்கு பிறகு...

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தை ஒட்டியே பொருத்தப்பட்டு இருக்கும். ஒரு வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது வாக்கை பதிவு செய்த உடன், அருகில் உள்ள ஒப்புகைச்சீட்டு எந்திரத்தில் அவர் எந்த வேட்பாளருக்கு, எந்த சின்னத்துக்கு வாக்களித்தார் என்பதை பதிவு செய்து காட்டும். 7 நொடிகளுக்கு பிறகு அந்த ஒப்புகைச்சீட்டு அந்த எந்திரத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் விழுந்து விடும்.

சமீபத்தில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் புதிதாக அதிகாரிகள், வாக்காளர்கள் இந்த எந்திரத்தை பயன்படுத்தியதால் 20 சதவீதம் வரை குழப்பம் ஏற்பட்டது. எனவே அத்தகைய குழப்பங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, பயிற்சி பெறுவோர் ஒப்புகைச்சீட்டு எந்திரம் குறித்து முழுமையாகவும், தெளிவாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தலின்போது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அலுவலர்கள் திறமையாக செயல்பட்டனர் என்று பாராட்டு பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பயிற்சி முகாமில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கிராமங்களுக்கு வருகிறது

இந்த ஒப்புகைச்சீட்டு எந்திரங்கள் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்படுவதால், வாக்காளர்கள் அதுபற்றி தெளிவாக அறிந்த கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது ஒரு சட்டசபை தொகுதிக்கு தலா 7 எந்திரங்கள் வழங்கப்படுகிறது. அந்த எந்திரங்களை கொண்டு கிராமம், கிராமமாக கொண்டு செல்லப்பட்டு பொது மக்கள் மத்தியில் மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. இதற்காக 10 தொகுதிகளுக்கும் மொத்தம் 70 ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

மேலும் பழைய ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரத்தில், எந்திரமும், டிஸ்பிளே திரையும் தனித்தனியாக இருந்தன. தற்போது வந்துள்ள நவீன கருவியில், அதே எந்திரத்தில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை காட்டும் கண்ணாடி திரை அமைந்துள்ளது.


Next Story