பேரணாம்பட்டு அருகே வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு
பேரணாம்பட்டு அருகே வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் மேகநாதன். இவரது தாயார் மனோன்மணி (வயது 82). நேற்று முன்தினம் மேகநாதன் குடும்பத்தினர் தனித்தனி அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு ஒரு மணியளவில் மனோன்மணி இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து படுத்தார். அப்போது அந்த அறையில் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் உளியை காட்டி கழுத்தில் குத்தி விடுவதாக மிரட்டி 4 பவுன் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி திருடன், திருடன் என கத்தினார்.
உடனே மர்ம நபர் அங்கிருந்து பின்பக்க காம்பவுண்டு சுவர் ஏறி தப்பி ஓடிவிட்டார். பின்னர் மனோன்மணி தனது மகன் மேகநாதன் அறைக்கு சென்று பார்த்தபோது அந்த அறையின் கதவை மர்ம நபர் முன்பக்கமாக பூட்டி இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கதவை திறந்து நடந்த சம்பவத்தை மகனிடம் கூறினார்.
இதுகுறித்து மேகநாதன் பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகைளை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.