25 பவுன் நகை, ரூ.4 லட்சம் திருட்டு நடந்த பைனான்சியர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்துசென்ற மர்மநபர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிமூலம் விசாரணை


25 பவுன் நகை, ரூ.4 லட்சம் திருட்டு நடந்த பைனான்சியர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்துசென்ற மர்மநபர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிமூலம் விசாரணை
x
தினத்தந்தி 8 Feb 2019 4:00 AM IST (Updated: 7 Feb 2019 7:23 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் பைனான்சியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கத்தை திருடிய மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதைவைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர், 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

வேலூர் தென்னைமர தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). பைனான்சியர். மேலும் ஊதுபத்தி வினியோகஸ்தராகவும் உள்ளார். இவரது உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 5–ந் தேதி இரவு வேலூர் மாநகராட்சி அருகேயுள்ள திருமண மண்படத்தில் நடந்தது. இதில் அவர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். பின்னர் இரவு 2 மணியளவில் வீட்டுக்கு வந்தார்.

அப்போது முன்பக்க இரும்பு கதவு, மரக்கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. அறைகள் முழுவதும் ஆங்காங்கே துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ.4 லட்சம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருட்டு நடந்த நேரத்தில் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வுசெய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில், பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்து சென்ற காட்சி பதிவாகி உள்ளது.

ஆனால் அவருடைய முகம் தெளிவாக தெரியவில்லை. அதேபோன்று மோட்டார்சைக்கிளின் எண்களும் தெரியவில்லை. எனவே தொழில்நுட்பம் மூலம் மர்மநபரையும், மோட்டார்சைக்கிளையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த நேரத்தில் அங்குள்ள செல்போன் டவர்மூலம் பதிவான செல்போன் எண்களையும் போலீசார்சேகரித்து வருகின்றனர்.

அதேபோன்று பன்னீர்செல்வம் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையையும், பழைய குற்றவாளிகளின் கைரேகைகளையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.


Next Story