குழந்தையின் பெயர் பதிவு செய்யாத பிறப்பு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டுக்குள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்


குழந்தையின் பெயர் பதிவு செய்யாத பிறப்பு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டுக்குள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 7 Feb 2019 10:30 PM GMT (Updated: 7 Feb 2019 1:57 PM GMT)

குழந்தையின் பெயர் பதிவு செய்யாத பிறப்பு சான்றிதழ் வைத்து இருப்பவர்கள் இந்த ஆண்டுக்குள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

குழந்தையின் பெயர் பதிவு செய்யாத பிறப்பு சான்றிதழ் வைத்து இருப்பவர்கள் இந்த ஆண்டுக்குள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தெரிவித்து உள்ளார்.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிறப்பு இறப்பு பதிவு சம்பந்தமான அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளருமான வீரப்பன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பிறப்பு சான்றிதழ்

பிறப்பு இறப்பு பதிவாளர்கள் தங்கள் எல்லைக்குள் நிகழும் பிறப்பு, இறப்புகளை 100 சதவீதம் விடுபடாமல் பதிவு செய்ய வேண்டும். பிறப்பு இறப்பு பதிவுச்சட்டம் 1969 பிரிவு 12ன் படி விலையில்லா பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும். குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத சான்றிதழ் வைத்திருப்போர், குழந்தையின் பெயரை 31.12.2019–க்குள் பதிவு செய்ய வேண்டும். எனவே குழந்தை எப்போது பிறந்திருந்தாலும் 31.12.2019–க்குள் பெயரை பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். இறப்பு மருத்துவமனையில் நிகழ்ந்தால் படிவம் 4ம், வீடு மற்றும் மற்ற இடங்களில் நிகழ்ந்தால் படிவம் 4ஏ ஆகியவற்றை மருத்துவ அலுவலரிடம் பெற்று இறப்பை பதிவு செய்ய வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் இணைய வழியில் மட்டுமே பெறப்பட வேண்டும்.

விழிப்புணர்வு

கர்ப்பமடைந்த தாய்மார்கள் அருகில் உள்ள கிராம சுகாதார செவிலியர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனால் எளிதில் பிறப்பு சான்றிதழை பெற முடியும். 1.1.2018 முதல் அரசு மருத்துவமனைகளில் நிகழும் பிறப்பு, இறப்புகள் பதிவு செய்வதற்கு சுகாதார ஆய்வாளர்கள் பிறப்பு, இறப்பு பதிவாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே மக்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஆஸ்பத்திரி வளாகத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும். பிறப்பு, இறப்புகள் முறையாக பதிவு செய்ய பெர்துமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

யார்–யார்?

கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் கீதாராணி (தூத்துக்குடி), போஸ்கோராஜா(கோவில்பட்டி), சுகாதார பணிகள் இணை இயக்குநர்(பொறுப்பு) கமலவாசன், தூத்துக்குடி மாநகர நல அலுவலர் வினோத்ராஜா, மாநகராட்சி புள்ளிவிவர உதவியாளர் ஸ்ரீரங்கன் மற்றும் உதவி இயக்குநர்(பொறுப்பு) அமுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story