யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைசீட்டு எந்திரம் குறித்து தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்


யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைசீட்டு எந்திரம் குறித்து தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Feb 2019 10:45 PM GMT (Updated: 7 Feb 2019 3:54 PM GMT)

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைசீட்டு எந்திரம் குறித்து தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடந்தது. இதை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.

நாமக்கல், 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதியுடன் கூடிய ஒப்புகைசீட்டு எந்திரம் ( விவிபேட் எந்திரம்) பயன்படுத்தப்பட உள்ளது.

வாக்காளர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் தங்கள் வாக்கினை பதிவு செய்யும்போது, தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான அந்த எந்திரத்தில் குறிப்பிட்ட வாக்காளர் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர், சின்னம் சிறிய துண்டு சீட்டில் அச்சிடப்பட்டு வாக்காளர் பார்வையிடும் அளவிற்கு 7 விநாடிகள் காண்பிக்கப்படும். பின்னர் அந்த துண்டு சீட்டு தானாகவே அறுந்து எந்திரத்தின் கீழ் பகுதியில் சேமிக்கப்படும்.

இந்த எந்திரத்தின் செயல்பாடு குறித்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தெரிந்து கொள்வதற்காக நேரடி செயல்விளக்க நிகழ்ச்சிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களிலும் நடத்தப்பட உள்ளன.

அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும்் தலா 10 எண்ணிக்கையில் மொத்தம் 60 ‘விவிபேட்’ எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த எந்திரங்களை பயன்படுத்தும் முறை குறித்து தேர்தல் பணி அலுவலர்கள் தெரிந்து கொள்வதற்காக நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்து எந்திரத்தின் பயன்பாடு குறித்து அலுவலர்களுக்கு விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story