உடன்குடி அனல் மின்நிலையத்துக்கு மண் ஏற்றிச் சென்ற 8 லாரிகள் சிறைபிடிப்பு
உடன்குடி அனல் மின் நிலையத்துக்கு மண் ஏற்றிச் சென்ற 8 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
உடன்குடி,
உடன்குடி அனல் மின் நிலையத்துக்கு மண் ஏற்றிச் சென்ற 8 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
லாரிகள் சிறைபிடிப்புஉடன்குடியில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு நிலத்தை மேடாக்கி சமப்படுத்துவதற்காக, உடன்குடி பகுதியில் உள்ள சுப்புராயபுரம் குளம், கல்லாநேரி குளம், புல்லாநேரி குளம் ஆகியவற்றில் இருந்து கரம்பை மண்ணை ஏராளமான லாரிகளில் எடுத்து செல்கின்றனர்.
இந்த லாரிகள் உடன்குடி அருகே கொட்டங்காடு வழியாக செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் நேற்று மாலையில் நாராயணபுரம் பிரிவு ரோடு பகுதியில் மண் லோடு ஏற்றி வந்த 8 லாரிகளை சிறைபிடித்தனர்.
பேச்சுவார்த்தைஇதுகுறித்து தகவல் அறிந்ததும், மெஞ்ஞானபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உத்திரகுமார், வெங்கடராமானுஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் டேனியல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து லாரிகளை உடன்குடி மெயின் பஜார் வழியாக மாற்றுப்பாதையில் கொண்டு செல்லவும், லாரிகளில் உள்ள மண்ணை தார்ப்பாய் மூலம் மூடி கொண்டு செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து லாரிகளை விடுவித்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.