மோகனூர் அருகே ஏரியில் காலாவதியான பொருட்களை கொட்டி தீ வைத்த மர்ம நபர்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு


மோகனூர் அருகே ஏரியில் காலாவதியான பொருட்களை கொட்டி தீ வைத்த மர்ம நபர்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Feb 2019 10:15 PM GMT (Updated: 7 Feb 2019 4:02 PM GMT)

மோகனூர் அருகே ஏரியில் காலாவதியான பொருட்களை மர்ம நபர்கள் கொட்டி தீ வைத்து சென்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மோகனூர்,

இதுபற்றிய விவரம் வருமாறு-

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.வாழவந்தி ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், சரக்கு வாகனங்களில் காலாவதியான குளிர்பான பாட்டில்கள், பாக்கெட் மோர், பாக்கெட் தயிர், பாக்கெட் பால் என பல்வேறு பொருட்களை கொண்டு வந்துள்ளனர். அவற்றை ஐயந்தோட்டம் செல்லும் வழியில் ஏரியில் கொட்டி தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் அதிலிருந்து துர்நாற்றத்துடன் புகைமூட்டம் ஏற்படுகிறது.எரிந்து கிடக்கும் அந்த பொருட்களை நாய்கள், பறவைகள் தூக்கிச் சென்று போட்டு வருகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது:-

ஏரிப்பகுதியில் இரவு நேரங்களில் சரக்கு வாகனங்களில் மர்ம நபர்கள் பல்வேறு காலாவதியான பொருட்களை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள்.

இதனால் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் ஏரியில் இருந்து சற்று தூரத்தில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோல் மீண்டும் யாரேனும் கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story