ஓமலூர் பகுதியில் தண்ணீர் இன்றி கருகும் பூக்கள் விவசாயிகள் கவலை
ஓமலூர் பகுதியில் தண்ணீர் இன்றி பூக்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓமலூர்,
ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள பண்ணப்பட்டி, தின்னப்பட்டி, காருவள்ளி, பூசாரிபட்டி, மூக்கனூர், டேனிஷ்பேட்டை பொட்டியபுரம், காமலாபுரம், தும்பிபாடி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாமந்தி சாந்தினி, சென்ட், வைலட், பூர்ணிமா மஞ்சள், பூர்ணிமா சிகப்பு போன்ற பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் மழையின்றி கடும் வறட்சியான காலநிலை நிலவுகிறது. மேலும் காலை நேரத்தில் பனியின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி பூஞ்செடிகளை காப்பாற்றி வந்தனர். எனினும் போதிய தண்ணீர் கிடைக்காததால் பூக்கள் கருகி வருகின்றன. இதனிடையே பூக்கள் மொட்டு விடும் பருவத்தில் பேன் பூச்சிகள் தாக்குவதாலும் பூக்கள் கருகுகின்றன.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் பேன்பூச்சி களை அழிக்க பூச்சிக்கொல்லி மருந்து அடித்து உள்ளனர். ஆனால் எந்த பூச்சிக்கொல்லி மருந்துக்கும் பேன் பூச்சிகள் சாகாமல் தொடர்ந்து மொட்டுகளை தாக்கி வருகிறது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், தண்ணீர் இல்லாமலும் பூ மொட்டுகள் தொடர்ந்து கருகி வருவதால் அவற்றை, டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஓமலூர் பகுதியில் ஆண்டுதோறும் பூக்களில் பேன்பூச்சிகள் தாக்குதல் ஏற்படும். இதற்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் அவை இறந்துவிடும், ஆனால் தற்போது எந்த பூச்சிக்கொல்லி மருந்து அடித்தாலும் பேன் பூச்சிகள் சாவதில்லை. இது குறித்து வேளாண்மை துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் யாரும் வந்து பார்க்கவில்லை. இறுதியில் அழித்துவிடும் முடிவுக்கு வந்து களைகொல்லி மருந்தாவது அடித்தால் பேன் சாவுமா? என பார்த்து களைகொல்லி மருந்தும் அடித்து பார்த்துவிட்டோம். அதற்கும் பலன் கிடைக்கவில்லை.
மேலும் போதிய தண்ணீர் இல்லாமலும் பூ மொட்டுகள் காய்ந்து வருகின்றன. தற்போது பூக்கள் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.100 வரை கிடைக்கிறது. இந்த நேரத்தில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து மிஞ்சிய உள்ள பூக்களையாவது காப்பாற்றவேண்டும். மேலும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story