வீட்டை விற்பதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


வீட்டை விற்பதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 7 Feb 2019 11:15 PM GMT (Updated: 7 Feb 2019 4:18 PM GMT)

வீட்டை விற்பதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம், 

சேலம் மாமாங்கம் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி பூங்கொடி (வயது 32). இவர், நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். பின்னர் அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உடனே பூங்கொடியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற பூங்கொடி கூறியதாவது:-

எனக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன. கணவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நான் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்பதாக என்னிடம் கூறினார். நான் அந்த வீட்டை வாங்கிக்கொள்கிறேன் என்று கூறி முன்பணமாக ரூ.8½ லட்சம் கொடுத்தேன். மீதி பணத்தை ஒப்பந்தம் போட்டு சில மாதங்களில் தந்துவிடுகிறேன். அதற்கு கால அவகாசம் தரும்படி கேட்டுக்கொண்டேன். இதற்கு வீட்டின் உரிமையாளரும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் அந்த வீட்டை உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாக தகவல் வந்தது. இதனால் வீட்டை விற்பதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து பணத்தையும் போலீசார் வாங்கி கொடுக்கவில்லை.

சமீபத்தில் ரவுடிகள் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இதனால் மனஉளைச்சல் அடைந்து தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தேன். இது தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணவர் இல்லாமல் 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். எனவே, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் போலீசார் தடுத்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீட்டை விற்பதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story