டிரைவர் இல்லாமல் தானாக வந்த லாரியால் விபத்து ஆட்டோவில் இருந்த இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


டிரைவர் இல்லாமல் தானாக வந்த லாரியால் விபத்து ஆட்டோவில் இருந்த இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 7 Feb 2019 10:15 PM GMT (Updated: 7 Feb 2019 4:34 PM GMT)

புளியந்தோப்பில் டிரைவர் இல்லாமல் தானாக வந்த லாரியால் விபத்து ஆட்டோவில் இருந்த இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் சாலையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக அங்குள்ள குடிசைகளை இடித்து அகற்றும் பணியில் நேற்று 2-வது நாளாக ஊழியர்கள் ஈடுபட்டனர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் போலீசார் சிலர் அங்கு நிறுத்தி இருந்த ஒரு ஆட்டோவில் அமர்ந்து இருந்தனர். அப்போது சாலையின் மேடான பகுதியில் நிறுத்தி இருந்த லாரி ஒன்று திடீரென டிரைவர் இல்லாமல் தானாக நகர்ந்து வேகமாக வந்தது.

அந்த லாரி இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அமர்ந்து இருந்த ஆட்டோ மீது மோதுவது போல் வந்தது. இதை கண்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சக போலீசார் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனே அங்கு நின்று இருந்த லாரி டிரைவர் ஏழுமலை (வயது 36) ஓடிவந்து ஆட்டோ மீது மோதாமல் இருக்க லாரியை கீழே இருந்தபடியே திருப்பினார்.

இதனால் ஆட்டோ மீது மோதாமல் அருகில் நிறுத்தி இருந்த ஒரு மோட்டார்சைக்கிள் மீது மோதியபடி லாரி நின்றது. ஆட்டோ மீது மோதுவது தவிர்க்கப்பட்டதால் அதில் இருந்த இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

போலீசாரை காப்பாற்றிய டிரைவர் ஏழுமலை, லாரிக்கும், ஆட்டோவுக்கும் இடையில் சிக்கியதால் அவரது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story