ஓசூர் பஸ் நிலையத்தில் மாணவிகள் ஒருவரையொருவர் தாக்கும் வீடியோ “வாட்ஸ் அப்”பில் வெளியானதால் பரபரப்பு
ஓசூர் பஸ் நிலையத்தில் மாணவிகள் சிலர் ஒருவரையொருவர் தாக்கும் வீடியோ “வாட்ஸ் அப்”பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. கர்நாடக மாநில அரசு பஸ்கள் பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஓசூர் பஸ் நிலையத்தில் பெங்களூருவுக்கு செல்லக்கூடிய கர்நாடக அரசு பஸ்கள் நிற்கும் இடத்தில் பள்ளி மாணவிகள் சிலர் சீருடையில் நிற்பது போன்ற வீடியோ நேற்று “வாட்ஸ் அப்”பில் வெளியானது.
சுமார் 26 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் நடைபெறுவதும், பின்னர் மாணவிகள் ஒருவரையொருவர் தாக்குவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தன. முடிவில் அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் சிலர் மாணவிகளை சமாதானப்படுத்தியும், எச்சரித்தும் அங்கிருந்து அனுப்புகிறார்கள்.
இந்த வீடியோ கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு ஓசூர் பஸ் நிலையம் பகுதியில் நடந்த சம்பவம் போலவே தெரிகிறது. ஓசூர் பகுதியில் உள்ள ஏதோ ஒரு பள்ளியின் மாணவிகள் அனைவரும் பஸ்சுக்காக காத்திருந்த நேரத்தில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் இந்த மோதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story