தர்மபுரி கோட்டை பரவாசுதேவசாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது


தர்மபுரி கோட்டை பரவாசுதேவசாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 8 Feb 2019 4:30 AM IST (Updated: 7 Feb 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கோட்டை பரவாசுதேவசாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது.

தர்மபுரி,

தர்மபுரி கோட்டையில் ஸ்ரீவரமகாலட்சுமி உடனமர் ஸ்ரீ பரவாசுதேவசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிய ராஜகோபுரம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள், ஸ்ரீவாரி மண்டபம், திருக்கல்யாண உற்சவ மண்டபம், புதிய கொடிமரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி எஸ்.வி. ரோடு சாலை விநாயகர் கோவிலில் இருந்து யானை, குதிரைகள், பசுக்கள் அணிவகுக்க தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் புனிதநீர் குடங்களை எடுத்து கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோட்டை கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையை சென்றடைந்தது. அங்கு ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீமகாலட்சுமி ஹோமம், ஸ்ரீதன்வந்திரி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இன்று (வெள்ளிக் கிழமை) மாலை 4½ மணிக்கு கணபதி பூஜை, வாஸ்து பூஜையுடன் முதல்கால யாகபூஜை நடக்கிறது. நாளை (சனிக் கிழமை) 2 மற்றும் 3-ம் கால யாகபூஜை, சாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகியவை நடக்கிறது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோபுரங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வேதமாற்று முறை, தீர்த்த பிரசாத வினியோகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து காலை 10 மணிமுதல் சர்வ தரிசனமும், மதியம் 1½ மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.

விழாவையொட்டி நாளை மறுநாள் முற்பகல் 11½ மணி முதல் மாலை வரை டி.என்.வி. மாடர்ன் ரைஸ்மில் வளாகத்தில் பக்தர்கள், பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா, செயல் அலுவலர் அமுதசுரபி, ஸ்ரீவாரி சேவாடிரஸ்ட் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், கோவில் அர்ச்சகர் விஜயராகவ பட்டாச்சாரியார் மற்றும் விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Next Story