அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது என்று குழந்தைகள் நலப்பிரிவுத் துறைத் தலைவர் டாக்டர் செந்தில்குமரன் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட தலைநகரான சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான வகையில் தூய்மையாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் பிரிவு, பெரியவர் மற்றும் பெண்களுக்கான தனிப்பிரிவு, இதய நோயாளிகளுக்கான பிரிவு, காய்ச்சல் தடுப்பு பிரிவு, பிரசவ வார்டு, புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு என்று தனித்தனி பகுதிகளாக அமைந்துள்ளது.
இதில் குழந்தைகளுக்கு 2 பிரிவுகள் உள்ளன. இதில் பிறந்த குழந்தைகளை பாதுகாக்க தனிபிரிவும், 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்று மற்றொரு தனிப் பிரிவும் அமைந்துள்ளது. மேலும் இங்கு 12 வயதிற்குள்ளான குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு நவீனமுறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. அந்த வார்டில் ஒவ்வொரு படுக்கைக்கும் தனித் தனி மின்விசிறி, ஆக்சிஜன் பொருத்தும் வசதி, தனித் தனியான திரைச்சீலை போன்றவைகளுடன் அறை முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துமனையின் குழந்தைகள் நலப்பிரிவுத் துறைத் தலைவர் டாக்டர் செந்தில்குமரன் கூறியதாவது:- நவீன வசதிகளுடன் கூடிய இந்த குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் 21 படுக்கைகள் உள்ளன. இதில் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் இந்த வார்டுகளில் 24மணி நேரமும் பணி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள்.
இது தவிர இந்த வார்டில் உள்ள எல்லா படுக்கைக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் வசதியும், மின்விசிறி வசதியுடன் முற்றிலும் குளிரூட்டப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை அளித்து குணமடைந்த குழந்தைகள் அருகில் உள்ள ஸ்டெப்டவுன் வார்டுக்கு மாற்றப்பட்டு, முழுமையாக குணமடைந்த பின்னர் தான் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் எடை குறைவான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு சுமார் 500 குழந்தைகள் வரை சிகிச்சை பெற்று செல்கின்றனர். தனியார் மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் சிகிச்சை பார்க்கப்படுகிறது.
மேலும் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுடன் அவர்களின் தாய் அல்லது பாட்டி உடன் தங்க அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு முட்டை பால், ரொட்டி ஆகியவைகளும் வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்ட மக்களுக்கு தமிழக அரசின் இந்த குழந்தைகள் அவசர பிரிவு மிக பெரிய பயனுடையதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story