யாருக்கு வாக்களித்தோம் என்பதை 7 வினாடிகளுக்குள் பார்க்கலாம்
யாருக்கு வாக்களித்தோம் என்பதை நவீன எந்திரத்தில் 7 வினாடிகளுக்குள் பார்க்கலாம் என்று, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் அதிகாரி விளக்கம் அளித்தார்.
திண்டுக்கல்,
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக தேர்தல் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் பயன்படுத்தப்பட இருக்கிறது.
இந்த நவீன எந்திரம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் இணைக்கப்படும். இதன்மூலம் எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ளலாம். எனவே, வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தின் பயன்பாடு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தேர்தல் அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கலால் உதவி ஆணையர் கமலக்கண்ணன் பயிற்சி அளித்தார். அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தை இணைப்பது, சோதனை செய்தல் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தார்.
மேலும் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் விருப்பமான சின்னத்துக்கான பொத்தானை அழுத்தியதும், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தில் அது தெரிவது குறித்து விளக்கினார். வாக்களித்த பின்னர் 7 வினாடிகள் வாக்களித்த சின்னத்தை அந்த எந்திரத்தில் பார்க்கலாம்.
அதன்பின்னர் சின்னம் அச்சாகும் ரசீது தானாக துண்டிக்கப்பட்டு தனி பெட்டியில் விழுந்து விடும். எனவே, 7 வினாடிகளுக்குள் வாக்காளர்கள் அதை பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். இதுகுறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண் டும். இதன்மூலம் அனைத்து வாக்காளர்களையும், வாக்களிக்க வரவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதில் தேர்தல் அலுவலர் சுப்பிரமணியபிரசாத், துணை தாசில்தார்கள் ஆறுமுகம், முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story