காரங்காடு கிராமத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி
தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
தொண்டி,
தமிழகத்தில் உள்ள கடற்கரையில் காரங்காடு கிராமத்தில் உள்ள மாங்குரோவ் காடுகள் பறவைகளின் முக்கிய வாழிடமாக விளங்குகிறது. இங்குள்ள மாங்குரோவ் காடுகளில் அரிய பறவை இனங்களான பூநாரை, செங்கோல்நாரை, கரண்டிவாயன், நத்தை கொத்தி நாரை, கூழைகடா, வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், நெடுங்கால் உள்ளான், அலா மற்றும் கடல்புறா போன்றவை அதிகம் காணப்படுகிறது. இந்த அரிய வகை பறவைகள் கடல் சூழலின் சுகாதாரத்தை பேணுவதிலும், சிறு பூச்சிகளை உட்கொண்டு சூழல் வளம் காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு வகையான பறவை இனங்கள் உணவுத் தேவைகளுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் காரங்காடு மாங்குரோவ் காடுகளுக்கு வருகின்றன.
இதையடுத்து தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் அசோக் குமார், விருதுநகர் வனப்பாதுகாவலர் நிகர் ரஞ்சன் ஆகியோர் தலைமையில் மும்பை இயற்கை வரலாற்று சங்க இணை இயக்குனர் பாலச்சந்தர், சென்னை சந்திரசேகர், கோவை இயற்கை சங்க உறுப்பினர் பிசு, உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், வனச்சரகர் சதீஷ், வனவர் சுதாகர் மற்றும் பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், மாணவ-மாணவிகள் கொண்ட 3 குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. இந்த குழுவினர் படகுகளில் சென்று மாங்குரோவ் காடுகளை சுற்றி வந்து பறவைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தினர். மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்தும் பறவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதேபோல சக்கரக்கோட்டை, சித்திரங்குடி, கஞ்சிரங்குளம், தேர்த்தங்கால் உள்ளிட்ட சரணாலயங்களிலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியை நடத்துகின்றனர். மற்றொரு குழுவினர் மேலசெல்வனூர், வேம்பார் மற்றும் கீழக்கரையை ஒட்டி உள்ள தீவு பகுதிகளிலும், இன்னொரு குழுவினர் தனுஷ்கோடி மற்றும் கோதண்டராமர் கோவில் ஆகிய பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story