நத்தம்-துவரங்குறிச்சி இடையே விவசாய நிலங்கள் வழியாக 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு
நத்தம்-துவரங்குறிச்சி இடையே விவசாய நிலங்கள் வழியாக 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முதல் மதுரை வரையும், நத்தம் முதல் துவரங்குறிச்சி வரையும் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில் நத்தம்-துவரங்குறிச்சி இடையே 27 கி.மீ. தூரத்துக்கு விவசாய நிலங்கள் வழியாக சாலை அமைக்கப்பட இருக் கிறது. இதற்கு 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விவசாய நிலங்கள் வழியாக சாலை அமைப்பதை கைவிடும்படி கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு கொடுத்தனர். இந்த நிலையில் நேற்றும் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் விவசாய நிலங்கள் வழியாக 4 வழிச்சாலை அமைப்பதை எதிர்த்து கோஷமிட்டு, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ஜஸ்டின் பிரபாகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நத்தம்-துவரங்குறிச்சி இடையே ஏற்கனவே சாலை உள்ளது. அதை 4 வழிச்சாலையாக மாற்றலாம். ஆனால், வேறு வழியாக 4 வழிச்சாலை அமைக்க உள்ளனர். இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவிலான விவசாய நிலங்கள், 500-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள், 100 கிணறுகள் பாதிக்கப்பட உள்ளன.
மேலும் நிரந்தர பலன்தரும் தென்னை, கொய்யா, புளி, மா மரங்கள் மற்றும் விவசாய பயிர்களை இழக்க நேரிடும். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் சிறு, குறு விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, நத்தம்- துவரங்குறிச்சி சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் முக்கிய நிர்வாகிகளை, கலெக்டர் அலுவலகத்துக்குள் போலீசார் அழைத்து சென்றனர். அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் வேலுவிடம், நிர்வாகிகள் மனு கொடுத்தனர். மேலும் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story