‘எனது சம்மதம் இன்றி என்னை பெற்றுவிட்டார்கள்’ தாய்-தந்தைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக வாலிபர் அறிவிப்பு


‘எனது சம்மதம் இன்றி என்னை பெற்றுவிட்டார்கள்’ தாய்-தந்தைக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக வாலிபர் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2019 4:30 AM IST (Updated: 8 Feb 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

எனது சம்மதம் இன்றி தன்னை பெற்றதாக பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக மும்பையை சேர்ந்த வாலிபர் அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை,

செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் ‘குழந்தைச் செல்வம்' என்று சொன்னால் அது மிகையன்று. திருமணம் ஆனதும் அடுத்ததாக தம்பதிகளின் எதிர்ப்பார்ப்பு குழந்தைக்குத் தான். எத்தனை செல்வங்கள் இருந்தாலும் குழந்தை பேறுக்காக ஏங்கித் தவிப்பார்கள். மனித குலத்தின் நீடிப்பே குழந்தைகள் பிறப்பதில் தான் இருக்கிறது.

குழந்தை பாக்கியத்தின் மகத்துவம் இவ்வாறு இருக்க, உயிர் பிறப்புக்கு எதிரான கொள்கையுடைய மும்பை வாலிபர் ஒருவர் தனது சம்மதம் இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததாக பெற்றோருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மும்பையை சேர்ந்த ரபேல் சாமுவேல் (வயது 27) என்ற வாலிபர் தான் தனது பெற்றோருக்கு எதிராக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் போலி தாடி, மீசை மற்றும் கண்ணாடி அணிந்துகொண்டு ‘யூ-டியூப்'பில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், இந்த உலகில் பிறக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் சக்தி குழந்தைகளுக்கு இல்லை. எனவே அவர்களின் வாழ்க்கைக்கு பெற்றோர் தான் உதவ வேண்டும்.

உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், நாம் இந்த உலகில் நமது சம்மதம் இல்லாமலேயே கொண்டு வரப்பட்டு உள்ளோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.

எனவே நாம் எதற்கும் பெற்றோருக்கு கடமைப்பட்டவர்கள் அல்ல. நாம் வாழ்வதற்கு அவர்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டும். பெற்றோர் குழந்தைகளை முதலீடாகவோ அல்லது காப்பீட்டு திட்டங்களாகவோ கருதக்கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் பேஸ்புக் பதிவில், ‘தங்களது சுகத்துக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் என்னை பெற்றெடுத்து இருக்கிறார்கள். இவர்கள் சுகம் அனுபவிப்பதற்காக நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? நான் ஏன் உழைத்து சம்பாதிக்க வேண்டும்? என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் வைரலாகி உள்ளது. இவரது இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

‘மனநல ஆஸ்பத்திரியில் சேரும்படி' அவரை ஒருவர் பேஸ்புக்கில் விளாசி உள்ளார்.

ரபேல் சாமுவேலின் அறிவிப்பு குறித்து அவரது தாய் கவிதா கர்னட் சாமுவேல் தனது பேஸ்புக் பதிவில், ‘‘ அவரது சம்மதத்தை பெற்று அவரை எப்படி பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினால், நான் எனது தவறை ஒப்புக் கொள்வேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story