கியர் பாக்சில் மூங்கில் கம்பை சொருகி ஓட்டினார் மாணவர்கள் உயிருடன் விளையாடிய பள்ளி பஸ் டிரைவர் கைது
கியர் பாக்சில் மூங்கில் கம்பை சொருகி பள்ளி பஸ்சை ஓட்டி மாணவர்களின் உயிருடன் விளையாடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை கார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இன்டர் நேஷனல் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு வரும் மாணவர்களை வீட்டில் இருந்து அழைத்து வர பள்ளி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சின் டிரைவராக ராஜ்குமார்(வயது22) என்பவர் உள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ராஜ்குமார் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற தொழில் அதிபர் ஒருவரின் சொகுசு கார் மீது பள்ளி பஸ் மோதியது. இதில் கார் சேதம் அடைந்தது. பஸ்சில் இருந்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இதற்கிடையே தனது கார் சேதம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த தொழில் அதிபர் பஸ் டிரைவர் ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்ததும் அங்கு 2 போலீசார் வந்தனர். அவர்கள் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் பஸ்சுக்குள் சென்று பார்த்தபோது, கியர் பாக்ஸ் லிவர் இருக்கும் இடத்தில் மூங்கில் கம்பு சொருகி வைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் கியர் பாக்சில் மூங்கில் கம்பை சொருகி பஸ்சை ஓட்டி, மாணவர்களின் உயிருடன் விளையாடிய ராஜ்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 3 நாட்களுக்கு முன்பு பஸ்சை இயக்கும் போது, கியர் பாக்ஸ் லிவர் உடைந்து விட்டதாகவும் அதனால் மூங்கில் கம்பை சொருகி பஸ்சை ஓட்டிவந்ததாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பஸ் டிரைவர் ராஜ்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜாமீனில் விடுதலை செய்தார். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் பஸ் உரிமையாளர், டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்து உள்ளனர்.
தனியார் பள்ளி டிரைவர் மூங்கில் கம்பை கியர் பாக்சில் சொருகி பஸ்சை ஓட்டிய சம்பவம் மாணவர்களின் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story