உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகை


உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Feb 2019 10:45 PM GMT (Updated: 7 Feb 2019 7:35 PM GMT)

உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இந்த விற்பனைக்கூடத்துக்கு விழுப்புரம் பகுதிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்து, அறுவடை செய்த நெல், கம்பு, மணிலா, உளுந்து போன்ற பல்வேறு தானியங்களை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். அவ்வாறு கொண்டு வரும் விளை பொருட்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் விலை நிர்ணயம் செய்து, வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று காலை விவசாயிகள் தலா 100 கிலோ எடை கொண்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உளுந்து மூட்டைகளை விற்பனைக்காக வாகனங்களில் கொண்டு வந்தனர். அதிகாரிகள் உளுந்து ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.4,500-க்கும், குறைந்த பட்சமாக ரூ.4,100-க்கும் விலை நிர்ணயம் செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த விவசாயிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உளுந்து மூட்டை ஒன்று ரூ.6 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது உளுந்து மூட்டைகள் அதிகளவில் வந்துள்ளதால் அதன் விலையை குறைத்து நிர்ணயம் செய்துள்ளர்கள் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, உளுந்துக்கு கூடுதல் விலை வழங்குமாறு வலியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள் உடன்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மருது ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உங்களது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணவேண்டுமே தவிர பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று அறிவுரை கூறினர்.

இதனை ஏற்ற வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் உளுந்து கூடுதல் விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story