பெற்றோர் எதிர்ப்பு, காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி சாவு
செஞ்சி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்பாலை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் சுபா(வயது 19). திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் திருவண்ணாமலையில் உள்ள வேறு ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வரும் செஞ்சியை அடுத்த மேல்அருங்குணத்தை சேர்ந்த பிரபு(20) என்பவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் சுபாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் சுபாவை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுபா தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரபுவிடம் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த காதலர்கள் இருவரும் வாழ்க்கையில்தான் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேருவோம் என முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலை சுபா தனது பெற்றோரிடம் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றார். பின்னர் அவர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் காதலர்களான பிரபு, சுபா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை மேல் அருங்குணத்தில் உள்ள பிரபுவுக்கு சொந்தமான வயலில் பூச்சி மருந்து குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த பிரபுவின் உறவினர்கள் காதல் ஜோடியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சுபா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். பிரபுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி சத்தியமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் காலை பிரபு கல்லூரிக்கு சென்ற சுபாவை கீழ்பென்னாத்தூரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு மேல் அருங்குணத்தில் உள்ள தனக்கு சொந்தமான வயலுக்கு வந்தார். பின்னர் அவர்கள் ஏற்கனவே முடிவு செய்ததுபோல் தாங்கள் வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து சுபாவின் தந்தை ஏழுமலை கொடுத்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story