ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் பரிதாபம்


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் பரிதாபம்
x
தினத்தந்தி 8 Feb 2019 3:00 AM IST (Updated: 8 Feb 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் டோம்பிவிலி கோக்ரஸ்வாடியை சேர்ந்தவர் விபேந்திர யாதவ் (வயது29). என்ஜினீயரான இவர் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் அலுவலகம் செல்வதற்காக டோம்பிவிலி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் ஏறினார். அந்த ரெயிலில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது.

இதனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. வாசற்படியில் தொங்கியபடியே பயணம் செய்தார்.

இந்தநிலையில், ரெயில் டோம்பிவிலி - கோபர் இடையே வந்து கொண்டிருந்த போது, துரதிருஷ்டவசமாக அவர் கைப்பிடி நழுவி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை ரெயில்வே போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பலியான என்ஜினீயர் விபேந்திர யாதவுக்கு கடந்த மாதம் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது தெரியவந்தது.

இன்னும் சில வாரங்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில், அவர் ரெயில் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story