விருத்தாசலம் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலம் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2019 4:00 AM IST (Updated: 8 Feb 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே மணல் குவாரி அமைக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியில் உள்ள மணிமுக்தாறு மற்றும் வெள்ளாறு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு மாட்டு வண்டி மணல் குவாரிகள் இயங்கி வந்தன. இந்த குவாரிகளை அரசு மூடிவிட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தநிலையில் குமாரமங்கலம் மணிமுக்தாற்றில் மாட்டு வண்டி மணல்குவாரி அமைக்க கோரி நேற்று விருத்தாசலம் அடுத்த அரசக்குழி பஸ் நிறுத்தத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதுபற்றி அறிந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால், தொழிலாளர்கள் திட்டமிட்டப்படி போராட்டம் நடக்கும் என்று அறிவித்தனர். இந்தநிலையில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொழிலாளர்களை அழைத்து, சாலை மறியல் செய்ய அனுமதி கிடையாது என்றார். இதையடுத்து தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அரசக்குழி பஸ் நிறுத்தம் அருகே மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் திரண்டனர். தொடர்ந்து மாட்டு வண்டிகளை சாலையின் இருபக்கங்களிலும் நிறுத்தி விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனைத்து கிராம மாட்டுவண்டி தொழிலாளர் சங்க சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். அனைத்து கிராம மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தை சார்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்களும், கட்டிட தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டு வி.குமாரமங்கலம் மணிமுக்தாற்றில் மணல் குவாரி திறக்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story