ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு, அரசு பள்ளியை முற்றுகையிட்ட மாணவ-மாணவிகள்


ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு, அரசு பள்ளியை முற்றுகையிட்ட மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 7 Feb 2019 10:45 PM GMT (Updated: 7 Feb 2019 8:20 PM GMT)

ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளியை மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டனர்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரத்தில் பெட்டட்டி கிராமம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெட்டட்டி மட்டுமின்றி அண்ணா நகர், இளித்தொரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

சமீபத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பெட்டட்டி அரசு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பெட்டட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியை மும்தாஜ் ஜெகதளா அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் ஆசிரியைகள் புஷ்பா, கரன்சி அரசு பள்ளிக்கும், பிரேமா இளித்தொரை அரசு பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்டட்டி அரசு பள்ளியை பெற்றோருடன் மாணவ-மாணவிகள் நேற்று முற்றுகையிட்டனர். மேலும் ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம், பள்ளிக்கு புதிதாக பொறுப்பேற்ற தலைமை ஆசிரியர் ராதா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து பெற்றோருடன் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் மீண்டும் அவர்களிடம், புதிய தலைமை ஆசிரியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இது சம்பந்தமாக குன்னூர் கல்வி மாவட்ட அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்க போவதாக கூறிவிட்டு மாணவ-மாணவிகளை அழைத்து கொண்டு பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story