ஊட்டியில், விதிமுறைகளை மீறிய 12 கட்டிடங்களுக்கு ‘சீல்’


ஊட்டியில், விதிமுறைகளை மீறிய 12 கட்டிடங்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 8 Feb 2019 4:00 AM IST (Updated: 8 Feb 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் விதிமுறைகளை மீறிய 12 கட்டிடங்களுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஊட்டி,

நீலகிரி மலை மாவட்டமாகவும், சுற்றுச்சூழல் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இந்த மாவட்டத்தில் அதிகமான கட்டிடங்கள் கட்டப்படுவதால், நிலச்சரிவு, மண்சரிவு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாஸ்டர் பிளான் திட்டம், மலையிட பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை கொண்டு வந்தது. அதன்படி, வனப்பகுதி, அணை, மயானம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் கட்டிடங்கள் கட்ட வனத்துறை, வேளாண் பொறியியல் துறை, கனிமம் மற்றும் புவியியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

ஊட்டி நகரம் உள்பட பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் கட்டிடம் கட்டக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் கட்ட அனுமதி இல்லை. செங்குத்தான மலைச்சரிவில் கட்டிடங்கள் கட்டக்கூடாது. வணிக கட்டிடங்கள் கட்ட மாநில அரசின் திட்டக்குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே ஊட்டி நகரில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் உரிய அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டு உள்ளன. குடியிருப்பு பகுதிகளில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு, குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோத்தகிரி சாலையில் வணிக நிறுவனமாக செயல்பட்ட கட்டிடம், 11 தங்கும் விடுதிகள் போன்றவற்றுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக்கோரி அரசுக்கு மனு கொடுத்து இருந்தனர். மேலும் கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்க செல்லும் போது, போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி, கொடைக்கானலில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மேல்தளம் இடிக்கப்பட்டது. அதன் காரணமாக அரசு அனுமதி இல்லாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில், பொறியாளர் ரவி, நகர திட்டமைப்பு அதிகாரி இளங்கோவன், சுகாதார அதிகாரி டாக்டர் முரளி சங்கர் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஊட்டி அருகே கிரண்ட்அப் சாலையில் மலைச்சரிவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம், லவ்டேல் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி விவசாய நிலத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடம், நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி உள்பட 12 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைத்ததற்கான அறிவிப்பு நோட்டீசு முன்பகுதியில் ஒட்டப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு பெருமழை காரணமாக கிரண்ட்அப் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடு அடியோடு அடித்து செல்லப்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். அப்பகுதி அபாயகரமான பகுதியாக வருவாய்த்துறை அறிவித்து உள்ளது.

ஊட்டி நகரில் அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் குறித்தும், விதிமுறைகளை மீறி தொட்டபெட்டா, உல்லத்தி போன்ற பகுதிகளில் கட்டப்பட்டு உள்ள வணிக நிறுவனங்கள் குறித்தும் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story