நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை: கூலிப்படையை ஏவி கொன்றவர் சென்னை கோர்ட்டில் சரண் கள்ளக்காதலியும் சிறையில் அடைப்பு


நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை: கூலிப்படையை ஏவி கொன்றவர் சென்னை கோர்ட்டில் சரண் கள்ளக்காதலியும் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 8 Feb 2019 4:45 AM IST (Updated: 8 Feb 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை வழக்கில் கூலிப்படையை ஏவி கொன்றவர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவருடைய கள்ளக்காதலியும் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (வயது 42), பூ வியாபாரி. இவருடைய மனைவி கல்யாணி (40). இவர்களுடைய மகள் ஆர்த்தி.

கடந்த 31-ந் தேதி இரவு வீட்டில் இருந்த போது கல்யாணி, முத்து ஆகிய 2 பேரும் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கல்யாணிக்கும், அவருடைய அண்ணன் சுடலையாண்டிக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்ததும், இதனால் ஏற்பட்ட தகராறில் சுடலையாண்டி கூலிப்படையை ஏவி கல்யாணியையும், முத்துவையும் தீர்த்துக்கட்டியதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த கொலை தொடர்பாக சுடலையாண்டி மற்றும் கூலிப்படையினரை ஆரல்வாய்மொழி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே சுடலையாண்டிக்கும், திருமணமான கோகில வள்ளி (39) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், கொலை நடந்த பின் அந்த பெண், அவருடைய மகள்களுடன் தலைமறைவானதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்த கோகில வள்ளியை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரை நாகர்கோவிலுக்கு கொண்டு வந்தனர். சுடலையாண்டியும் அந்த விடுதியில் தங்கி இருந்ததாகவும், போலீசார் வருவதை அறிந்த அவர் தப்பியதும் தெரியவந்தது.

இதற்கிடையே கூலிப்படையை சேர்ந்த அகஸ்தீசுவரம் சுனாமி காலனியை சேர்ந்த மோகன் மகன் சகாயசாஜூ ஜெனிஸ் (24), அனந்தபத்மநாபபுரம் மாதவலாயத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (32), பாண்டியராஜ் மகன் ராஜா (35), அய்யப்பன் (25) ஆகிய 4 பேரும் நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்தநிலையில் பிடிபட்ட கோகில வள்ளியிடம் (39) தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சுடலையாண்டி தனது பூர்வீக தோட்டத்தில் கல்யாணி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய கூலிப்படையுடன் திட்டம் தீட்டியுள்ளார். அப்போது அவர்களுடன் கோகில வள்ளியும் உடனிருந்துள்ளார். மேலும், போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் கூலிப்படையினர் கோகில வள்ளியை தொடர்பு கொண்டு பேரம் பேசிய தகவலும் இருந்தது. அதைதொடர்ந்து போலீசார் கோகில வள்ளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இந்த கொலையில் கூலிப்படையை ஏவிய சுடலையாண்டி சென்னை தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story