நாடாளுமன்ற தேர்தல், தி.மு.க. கூட்டணியில் விருதுநகர் தொகுதி யாருக்கு? கட்சி தொண்டர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு


நாடாளுமன்ற தேர்தல், தி.மு.க. கூட்டணியில் விருதுநகர் தொகுதி யாருக்கு? கட்சி தொண்டர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 7 Feb 2019 10:22 PM GMT (Updated: 2019-02-08T03:52:40+05:30)

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதி தி.மு.க. கூட்டணியில் யாருக்கு ஒதுக்கப்படும் என அக்கூட்டணி கட்சி தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

விருதுநகர், 

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்கப்பட்டது. அதேபோன்று தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலும் மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை எதிர்த்து தேசிய அளவில் எதிர்கட்சிகள் மாநில கட்சிகளுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன.

விருதுநகர் தொகுதி கடந்த 2014-ம் ஆண்டு தான் உருவானது. இத்தொகுதியில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் அடங்கி உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதிகள் தென்காசி நாடாளுமன்ற தொகுதியிலும் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தை பொருத்தமட்டில் அ.தி.மு.க. ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எனினும் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி வர வாய்ப்பு உள்ளது, அதனுடன் சில மாநில கட்சிகள் இணையக்கூடும் என்றும் கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியை பொருத்தமட்டில் அதில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பகிரங்கமாகவே தாங்கள் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன.

நேற்று முன்தினம் விருதுநகர் வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் முத்தரசன் தி.மு.க. கூட்டணி பகிரங்க கூட்டணி என்றும், தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை தான் இனி நடைபெற வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். விருதுநகர் வந்திருந்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ம.தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்ததுடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதி உறுதியாக கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கே வாய்ப்பு தரப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மாணிக்கம்தாகூர் வெற்றி பெற்றார். கடந்த 2014 தேர்தலில் தற்போது தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களோடு தி.மு.க.வும் களத்தில் நின்றது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என விருதுநகர் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு வந்திருந்த வைகோவிடம் கேட்டபோது, கட்சியின் உயர்மட்டக்குழு தான் முடிவு செய்யும், கட்சி தான் வேட்பாளரை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க., விருதுநகர் தொகுதியில் வைகோ போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

காங்கிரசை பொருத்தமட்டில் இத்தொகுதியில் இருமுறை போட்டியிட்ட மாணிக்கம்தாகூர் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்து இருந்தாலும், தொடர்ந்து இத்தொகுதியில் நெருக்கமான தொடர்பை வைத்துள்ளார். தொகுதி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதோடு, இத்தொகுதியில் காங்கிரஸ் வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பதில் இருந்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியினர் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையோடு உள்ளனர். மேலும் காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் பட்சத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மாணிக்கம்தாகூருக்குதான் வாய்ப்பு தரும் என உறுதியான நம்பிக்கையும் அவர்களிடையே உள்ளது. இதுபற்றி தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசியபோது, தொகுதி பங்கீட்டுக்கு பிறகு இந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு தாங்கள் முனைப்புடன் செயல்படுவோம் என்று தெரிவித்தனர்.

தற்போது உள்ள நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடைபெறாவிட்டாலும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அல்லது ம.தி.மு.க.வுக்கு தான் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்களிடையே உள்ளது. அதிலும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் மாணிக்கம்தாகூரும், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் அக்கட்சியின் உயர் மட்டக்குழு அறிவிக்கும் வேட்பாளரும் போட்டியிடுவார்கள். ஆனாலும் இத்தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பது தி.மு.க. கையில் தான் உள்ளது. காங்கிரசை பொருத்தமட்டில் தொகுதி பங்கீட்டின் போது அக்கட்சி கேட்கும் தொகுதிகளில் விருதுநகரும் உறுதியாக இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது.

Next Story