மதுரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு
மதுரையில் வருகிற 16-ந்தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. அபுபக்கர் கூறியுள்ளார்.
மதுரை,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பாசித் தலைமை தாங்கினார். கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் அப்துல் காதிர் ஆலிம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மதுரையில் வருகிற 16-ந் தேதி நடக்க உள்ள மாநில மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், கடையநல்லூர் எம்.எல்.ஏ. கே.ஏ.எம். முகமது அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை ஒத்தக்கடையில் வருகிற 16-ந் தேதி கட்சியின் தலைவர் பேராசிரியர் காதர்முகைதீன் தலைமையில் மாநில மாநாடு நடக்க உள்ளது. இதில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹி ருல்லா, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகளின் செயலாளர்கள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கலந்து கொள்கின்றன.
தற்போதைய பா.ஜ.க. ஆட்சி எல்லா நிலைகளிலும் தோல்வி கண்டுள்ளது. அது மட்டுமின்றி, தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் ஆட்சியாகவும் உள்ளது. காவிரி வரக்கூடிய பாதையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஆதரவளித்துள்ளது. தமிழக சட்டசபை தீர்மானங்களை மதிப்பதில்லை. மாநில உரிமைகளை பறிப்பது, மத நல்லிணக்கத்தை கெடுப்பது என நாட்டை பின்னோக்கி தள்ளிவிட்டது. தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சமூக நீதிக்கு அடித்தளமிட்ட மாநிலங்களில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப் படவில்லை. ஆனால், பொருளாதார அளவுகோலை கொண்டு இடஒதுக்கீடு வழங்குவதால் எந்த நன்மையும் ஏற்படாது. உள்ளாட்சித்தேர்தல் நடத்தாததால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களின் பிரச்சினைகளை பேசி வருகிறார்.
வக்பு வாரியத்தின் 25 சதவீத சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்க தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியை அகற்றி தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story