பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கூட்டணி அரசு கவிழும் - எடியூரப்பா பரபரப்பு பேச்சு
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கூட்டணி அரசு கவிழும் என்று எடியூரப்பா பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
பெங்களூரு,
சட்டசபை கூட்டம் நேற்று தொடங்குவதற்கு முன்பு கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் அதன் தலைவர் எடியூரப்பா நேற்று பெங்களூரு விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். இதில் எடியூரப்பா பேசியதாவது:-
கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழும். அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. அதனால் நமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினரின் ஆசைகளுக்கு அடிபணிய வேண்டாம். உங்களுடன் கட்சி உள்ளது. உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். இந்த கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கவிழ்ந்துவிடும் என்று தோன்றுகிறது.
நமது கட்சி எம்.எல்.ஏ.க்களிடையே ஒற்றுமை தொடர்ந்து இருக்க வேண்டும். இன்று (அதாவது நேற்று) எடுத்துள்ள முடிவில் இருந்து யாரும் பின்வாங்கக்கூடாது. இந்த கூட்டணி அரசில் நடந்து வரும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு சாதகமாக இருக்கிறது. சட்டசபை கூட்டத்தில் நமது கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இது நமது கட்சி மேலிட தலைவர்களின் உத்தரவு ஆகும்.
கவர்னர் உரையின்போதே இந்த அரசுக்கு பெரும்பான்ைம இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது. குமாரசாமி மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அவர்களே சண்டை போட்டுக்கொண்டு ஆட்சியை இழப்பார்கள். நாம் பொறுமையாக அதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் எடியூரப்பா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story